விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைச்சான்று, அங்ககச்சான்று திட்டப்பணிகளை அதிகாரி திடீர் ஆய்வு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று திட்டப் பணிகளை அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
ஆய்வு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெற்று வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று திட்டப்பணிகளை சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் வளர்மதி ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், கொள்முதல் செய்யப்படும் விதை குவியல்களுக்கான கொள்முதல் பட்டியல், பகுப்பாய்வு அறிக்கை நகல், பதிவுச்சான்று ஆகிய ஆவணங்கள் பெறப்பட்டு இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை பட்டியலை முறைப்படி பராமரிக்க வேண்டுமெனவும், விதைக்குவியல் உண்மை இருப்பும் பதிவேட்டின் இருப்பும் சரியாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். அதோடு பருவத்திற்கேற்ற தரமான, சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குமாறு தெரிவித்தார்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்திற்குட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 1.91 ஏக்கர் கம்பு விதைப்பண்ணையை ஆய்வு செய்த அவர், விதை உற்பத்தியை பெருக்க தேவையான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.
அறிவுரை
பின்னர் விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விதைச்சான்று, விதை ஆய்வு மற்றும் விதை பரிசோதனை நிலைய அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தி தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடைபிடித்து செயலாற்றுமாறு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன், விதைச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன், விதை ஆய்வாளர்கள் ஜோதிமணி, நடராஜன், விதைச்சான்று அலுவலர்கள் கருணாநிதி, விஜயா, விதை பரிசோதனை அலுவலர்கள் சந்தோஷ்குமார், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.