தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 6 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-27 00:05 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ததால், கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 6 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு இயல்பை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'ராமெல்' புயல்

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 'ராமெல்' புயலாக மாறி வலுப்பெற்றுள்ளது. இது, தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று வங்க தேசம்-கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கம்-சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேசம்-மங்லாவுக்கு அருகில் நேற்று மாலை மையம் கொண்டிருந்தது.

இந்த சூழலில், புயல் காரணமாக, கடலில் சீற்றம் காணப்படும். இதனால், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிக்கும், வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்