கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சாரல் விழா
கம்பம் அருகே சுருளி அருவி பகுதியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் சுருளி சாரல் விழா நாளை தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது.
சாரல் விழா
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. அந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் சாரல் விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு கடைசியாக சாரல் விழா நடந்தது. அதன்பிறகு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சாரல் விழா நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நடத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
இந்தநிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சுருளி அருவியில் சாரல் விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. வழக்கமாக 2 நாட்கள் சாரல் விழா நடத்தப்படும். இந்த ஆண்டு 6 நாட்கள் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சாரல் விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளுடன் கூடிய விழிப்புணர்வு மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கலெக்டர் ஆலோசனை
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
சுருளி சாரல் விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, நீர்வளத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்கள் கண்காட்சி, சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைகளும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் மலிவு விலையில் வழங்கப்படவுள்ளது.
கலை நிகழ்ச்சிகள்
இதுதவிர பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள், சமூகநலத்துறை சார்பில் சிலம்பாட்டம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கின்றன. சாரல் விழா நடக்கும் நாட்களில் தேனி, உத்தமபாளையம் மற்றும் கம்பம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.