காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Update: 2023-05-24 06:15 GMT

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காளியம்மன் கோவில்

நல்லம்பள்ளி தாலுகா பேடரஅள்ளி ஊராட்சி காளியம்மன் கோவில் கொட்டாய் பகுதியில் காளியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடந்தது. அம்மன் கரகம் 18 கிராமங்களில் உலா வந்தது. பின்னர் கிராமங்கள் வாரியாக தினமும் பூசை கூடை அழைப்பு நடந்தது.

விழாவின் முக்கிய திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. தேரில் அம்மன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் சுமார் 100 அடி தூரம் சென்ற நிலையில் போலீசார் தேரை நிறுத்தும்படி கூறினர். தேரோட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தேர் நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திரளான பக்தர்கள்

தகவல் அறிந்த நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். கோவில் விழா குழுவினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேரின் உயரத்தை கணிசமாக குறைக்க வேண்டும். தேர் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு விழா குழுவினர் ஒப்புக்கொண்டு அதிகாரிகள் கூறியபடி தேர் மாற்றி அமைக்கப்பட்டது.

அதன்பிறகு நேற்று மாலையில் மீண்டும் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்