தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு - அறிவிப்பாணை வெளியீடு

சென்னையில் தொழில் நிறுவனங்களுக்கான அரையாண்டு நிறும வரியை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-09-13 06:38 GMT

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தியமைக்கப்பட்ட சட்டப்பிரிவு மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி நிறும வரியினை (கம்பெனி வரி) திருத்தியமைப்பது குறித்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி, 2023-24-ல் 2-ம் அரையாண்டு முதல் திருத்தியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுமம் வரியின் புதிய விகிதங்களாக, ஒரு லட்சத்திற்கு குறைவாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அரையாண்டு நிறும வரி ரூ.300 எனவும், ரூ.1 லட்சத்திற்கு மேல் ரூ.600 எனவும், ரூ.2 லட்சத்திற்கு மேல் ரூ.900 எனவும், ரூ.3 லட்சத்திற்கு மேல் ரூ.1,200 எனவும், ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.1,500 எனவும், ரூ.10 லட்சத்திற்கு மேல் மற்றும் அதற்கு மேல் ரூ.3 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட உள்ளது.

இதேபோல, சென்னை மாநகராட்சி எல்லைக்கு வெளியே தலைமையிடம் அமைத்து சென்னையில் இயங்கும் கிளை நிறுவனங்களுக்கான அரையாண்டு நிறும வரியும் உயர்த்தப்பட உள்ளது. மேலும், ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அல்லது முதன்மை அலுவலகம் சென்னை மாநகரில் இல்லாமல் இருந்தாலும் முதல் ஆண்டிற்கு நிறுமம் வரி ரூ.75 செலுத்தப்பட வேண்டும். எனவே, இதுகுறித்த ஆட்சேபணைகள் ஏதும் இருப்பின், அறிவிப்பாணை வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குக்குள் பெறப்படும் பட்சத்தில் சென்னை மாநகராட்சியால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதுகுறித்த ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால் அதனை, கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர். பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிடம், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்