சிதம்பரம் கோவில் பிரம்மோற்சவம் விவகாரம் - பொது தீட்சிதர் தரப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி

கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது? என பொது தீட்சிதர் தரப்புக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2024-05-10 16:00 GMT

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு இந்த மாதம் பிரம்மோற்சவம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த பிரம்மோற்சவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரம்மோற்சவம் நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்திருந்த ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு கடைசியாக 1849-ம் ஆண்டு பிரம்மோற்சவம் நடத்தப்பட்டதாகவும், அதன்பின் சைவ, வைணவ மோதல்கள் காரணமாகவும், தீட்சிதர்களின் எதிர்ப்பு காரணமாகவும் பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை என்றும் வாதிட்டார்.

இதையடுத்து பிரம்மோற்சவத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 1920-ம் ஆண்டு கோவில் நுழைவாயில்களை திறப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பிரம்மோற்சவம் குறித்து குறிப்பிடாததால், கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் பிரம்மோற்சவம் நடத்த முடியாது. பிரம்மோற்சவம் நடத்துவது மரபு விழாவா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை இல்லாத புதிய நடைமுறையை கொண்டு வர அரசுக்கு அதிகாரமில்லை" என வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து அரசு தரப்பில், "400 ஆண்டுகளாக நடைபெறாத பிரம்மோற்சவம் இப்போது நடத்தப்பட வேண்டும். உரிமையியல் நீதிமன்றம் பிரம்மோற்சவம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை என்று சொல்லிதான், பிரம்மோற்சவம் நடத்த அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களும் பிரம்மோற்சவம் நடத்த அனுமதி கோரியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தீட்சிதர்கள் தரப்பில், "மரபு விழாக்களாக இருந்தால் எந்த ஆட்சேபமும் இல்லை. பிரம்மோற்சவம் நடத்துவதால் நடராஜர் கோவிலின் ஆறு கால பூஜைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும்" என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது? என பொது தீட்சிதர் தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மரபு மற்றும் சட்ட விதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கின் விசாரணையை ஜூன் 24-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதன் மூலம் இந்த மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பிரம்மோற்சவ விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்