இலங்கைக்கு சீன கப்பல் வருகை எதிரொலி: மெரினா கலங்கரை விளக்கத்தில் ரேடார் சரிசெய்யும் பணி தீவிரம்

கடலோர பகுதிகளில் கப்பல்கள், படகுகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தை இந்த ரேடார் துல்லியமாக கண்காணிக்கும்.

Update: 2022-08-10 15:55 GMT

சென்னை,

சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த சீன கப்பலில் 750 கி.மீ. தூரம் வரை கண்காணிக்கும் கருவிகள் இருப்பதால், அதனைக் கொண்டு தென் இந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.

இது குறித்து இந்திய அரசு இலங்கையிடம் தெரிவித்த நிலையில், சீன கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இவற்றை மீறி சீன கப்பல் இலங்கை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் ரேடாரை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக ரேடார் பழுதாகி இருந்த நிலையில், தற்போது அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கடலோர பகுதிகளில் கப்பல்கள், படகுகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தை இந்த ரேடார் துல்லியமாக கண்காணிக்கும். அதே போல் கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களையும் உடனுக்குடன் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்து உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் பணியை இந்த ரேடார் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்