குடிநீர் கேட்டு நகராட்சி பொறியாளர் வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்

கோவில்பட்டியில் குடிநீர் கேட்டு நகராட்சி பொறியாளர் வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-25 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் குடிநீர் கேட்டு நகராட்சி பொறியாளர் வாகனத்தை நேற்று பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாகனம் சிறைபிடிப்பு

கோவில்பட்டி நகராட்சி பொறியாளர் ரமேஷ், 2-வது குடிநீர் குழாய் திட்டப்பணி குறித்த ஆய்வுப்பணிக்காக வேலாயுதபுரம் பகுதிக்கு நேற்று சென்றார். அப்போது அங்குள்ள பொதுமக்கள் பொறியாளர் ரமேஷிடம், தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக இப்பகுதிக்கு 2-வது குடிநீர் குழாய் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் இருந்த அளவுக்கு தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. தற்போது மிகவும் குறைந்த அளவு குடிநீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுவதால் இங்குள்ளவர்கள் பாதிக்கப்படுவதாக 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் லவராஜா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

அப்போது பொறியாளர் ரமேஷ், பொதுமக்களை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி பொறியாளர் வாகனத்தை சிறைபிடித்தனர். பின்னர் அந்த வாகனம் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

வேலாயுதபுரம் பகுதியில் 2-வது குடிநீர் குழாய் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பொதுமக்களை அவதூறாக பேசிய நகராட்சி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்