ஆக்கிரமிப்பை அகற்றவிடாமல் பொதுமக்கள் முற்றுகை

திருவலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றவிடாமல் பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-26 18:45 GMT

ஆக்கிரமிப்பு

காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த அம்முண்டி பகுதியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனால் உட்கோட்ட உதவி பொறியாளர் குமரேசன் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்திருந்தனர்.

முற்றுகை

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் குணராஜன், திருவலம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் அப்பகுதி மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகிறோம் என்று கூறி இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டனர். அதன்படி இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருவலம் -காட்பாடி சாலை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பாக இருந்தது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை காட்பாடி உதவிக் கோட்ட பொறியாளர் குமரேசன் கூறுகையில், இந்தப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் ஆக்கிரமிப்பை அகற்ற வந்ததாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்