கள்ளக்குறிச்சியில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி படிக்கட்டில் நின்று பயணம் செய்ததால் பரிதாபம்

கள்ளக்குறிச்சியில் ஓடும் பஸ்சின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-12-13 18:45 GMT

படிக்கட்டில் பயணம்

கள்ளக்குறிச்சி அருகே நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் அசோக் (வயது 19). இவர் சேலம் மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அசோக் சொந்த வேலை காரணமாக நாகலூரில் இருந்து தனியார் பஸ்சில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார். அப்போது அவர் பஸ் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த பஸ் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி அருகே வந்தபோது, படிக்கட்டில் இருந்து அசோக் திடீரென தவறி கீழே விழுந்து விட்டார்.

போலீசார் விசாரணை

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அசோக் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓடும் பஸ்சில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்