திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
கடந்த 14-ந்தேதி மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தார்.;
திருப்பூர்,
திருப்பூர் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கடந்த 14-ந்தேதி மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தார்.
தகவலை தொடர்ந்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பூர் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அது புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சென்னை வேளச்சேரி அருகே நேருநகர், என்.எஸ்.வீதியைச் சேர்ந்த சதீஸ் (வயது 40) என்பதும், அவர் டிரைவராக பணியாற்றுவதும் தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் சதீஸ், நேற்று திருப்பூர் ரெயில் நிலையம் பார்சல் புக்கிங் அலுவலகம் அருகே நிற்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று, அவரை கைது செய்தனர்.