விவாகரத்து வழக்கில் ஆஜராக இருந்த நிலையில்.. தி.மு.க. பிரமுகர் எடுத்த விபரீதமுடிவு
விவாகரத்து வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராக இருந்த நிலையில், தி.மு.க. பிரமுகர் அந்த விபரீத முடிவை எடுத்தார்.;
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் குட்டக்குழியை சேர்ந்தவர் ஜெயபாலன்(வயது 77), முன்னாள் ராணுவவீரர். இவருடைய மகன் அருண்பால்(39). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தி.மு.க இளைஞரணியின் திருவட்டார் ஒன்றிய துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். மேலும், இவர் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பனின் தங்கை மகனும் ஆவார்.
கடந்த 2014-ம் ஆண்டு அருண்பாலுக்கும், அருமனையைச் சேர்ந்த செல்வராஜ் மகள் ஷைபா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதன்பிறகு 2017-ம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஷைபா, கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு பத்மநாபபுரம் கோர்ட்டில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகும்படி வக்கீல், அருண்பாலிடம் நேற்று முன்தினம் கூறியதாக கூறப்படுகிறது. அப்போது அருண்பால், வக்கீலிடம் விசாரணைக்கு வரமாட்டேன் என கூறியுள்ளார். மேலும், அருண்பால் மீது வழக்குகள் போடப்பட்டதால் வேலை இழந்து பண நெருக்கடி ஏற்பட்டதாகவும், அதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அருண்பால் உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலையில் அவரது தாயார் பேபி, டீ கொடுப்பதற்காக மகனின் அறைக்கு சென்று கதவை திறந்தார். அப்போது அருண்பால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தனர் அங்கு ஓடி வந்தனர். உடனே அவர்கள் அருண்பாலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெயபாலன் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அருண்பாலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவரது உடல் குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோர்ட்டில் வழக்குகள் மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. விவாகரத்து வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராக இருந்த நிலையில் தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.