10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
காலாண்டு தேர்வு முடிவு அடிப்படையில் மாணவ-மாணவிகள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர்.;
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை கண்டிப்பாக அதிகரித்து காட்ட வேண்டும் என்ற முனைப்பில் பள்ளிக்கல்வித் துறை களம் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பல மாவட்டங்கள் தேர்ச்சி சதவீத பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தன. தலைநகராம் சென்னை தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது.
எனவே பின்தங்கிய மாணவ-மாணவிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறும் அளவுக்கு அவர்களை தயார்படுத்தி வருகின்றனர். காலாண்டு தேர்வு முடிவு அடிப்படையில் இவ்வகையான மாணவ-மாணவிகள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் மீது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்துகின்றனர்.
இதேபோல் பள்ளி அளவில் தேர்ச்சியில் பின்தங்கிய பள்ளிகளையும் பட்டியலிட்டு, அதனை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகளை சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களும் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் பொதுத்தேர்வு முடிவில் பிரதிபலிக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.