திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.;
மதுரை,
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் நேற்று வக்கீல் அருணாசலம் என்பவர் முறையிட்டார்.
அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். ஆனாலும் அவர் தன் மனுக்களை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வக்கீல் அருணாசலத்தை கோர்ட்டில் இருந்து வெளியேற்றுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அவர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், நீதிபதிகள், இந்த வழக்கில் தேவையான மனுதாரர்கள் இணைந்து விட்டனர். தனி நீதிபதியிடம் இருந்த வழக்கு விசாரணையின் போது யாரெல்லாம் இணை மனுதாரராக இணைந்தார்களோ அவர்களை மட்டுமே மேல்முறையீட்டு மனு விசாரணையில் சேர்க்க முடியும்.
இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அனைவரையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். அதை மீறி இவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.