4 ஏரிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடக்கம்

4 ஏரிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.

Update: 2023-09-08 18:49 GMT

கோரிக்கை ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதனை ஏற்றும், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவை பின்பற்றியும் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக தமிழக அரசின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சேரி ஏரி, குரும்பலூர் ஏரி, லாடபுரம் சின்ன ஏரி, மேலப்புலியூர் ஏரி ஆகிய 4 ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

அதிநவீன எந்திரங்களை கொண்டு...

இந்த ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு மழைக்காலத்திற்கு முன்பாகவே, ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தினர் அதிநவீன எந்திரங்களை கொண்டு ஏரிகளில் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அவற்றை அரவை எந்திரத்தின் மூலம் அரைத்து அப்புறப்படுத்தி வருகின்றனர். செஞ்சேரி ஏரியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர் வளத்துறையின் பெரம்பலூர் மருதையாறு வடிநில உபகோட்டத்தின் பெரம்பலூர் நகர் பாசன பிரிவின் உதவி பொறியாளர் மருதமுத்து, நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர்கள் கண்ணபிரான் (பெரம்பலூர்), சந்திரசேகர் (லாடபுரம்), பாசன ஆய்வாளர் ராஜாங்கம், தாசில்தார் கிருஷ்ணராஜ், நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் ஜெகதீஸ், தம்புராஜ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்