கந்துவட்டி புகார்கள் மீது கடும் நடவடிக்கை

கந்துவட்டி புகார்கள் மீது கடும் நடவடிக்கை என போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

Update: 2022-06-14 17:08 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த கார்த்திக் உளவுத்துறை எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தங்கதுரை ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று காலை அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் உத்தரவின்படி ஆபரேசன் கந்துவட்டி நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். கந்துவட்டி கொடுமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கந்து வட்டியால் பாதிக்கப்படுபவர்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். அந்த புகார்கள் மீது சட்டப்படி பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் கடலோர மாவட்டம் என்பதால் கடல்வழியாக கடத்தல் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தி கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், அவர் பொதுமக்கள் 24 மணி நேரமும் தங்களது புகார்கள் தொடர்பாக தன்னை 7603846847 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்