முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகார் விவகாரம் - திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-06-27 10:34 GMT

சென்னை,

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் தி.மு.க. அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு, 'ஊழலை ஒழிக்க வந்த உலக மகா உத்தமர் போல' மேடைக்கு மேடை பேசியதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மறந்து போய்விட்டதா? ஊழல் செய்த அத்தனை பேரையும் தனி நீதிமன்றம் அமைத்து தண்டிக்கப் போவதாக வாய்ச்சவடால் விட்டவர்கள், விசாரணைக்கு அனுமதிக்கவே இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்?

பழனிசாமி கம்பெனியோடு முன்பு போட்டுக்கொண்டதாக சொல்லப்பட்ட 60:40 ஒப்பந்தம், நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? இன்னும் எத்தனைக் காலத்திற்கு இப்படி கூட்டுக் களவாணித்தனம் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்