கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் தர்ணா

ஊதியம் வழங்கக்கோரி கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் தர்ணா

Update: 2023-05-05 18:45 GMT

அண்ணாமலைநகர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் குறித்த தேதிகளில் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஊதியம் வழங்கக்கோரி டாக்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாத ஊதியம் நேற்று வரை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேற்று காலை அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஊதியம் வழங்கக்கோரி நிர்வாக அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்து வந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் சிங்காரவேல் ஆகியோர் விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சென்னை உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தனர். இதையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்