கடன் தொல்லை: விஷம் குடித்த தந்தை-மகள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

கரூர் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த தந்தை-மகள் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் மனைவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update:2022-07-21 17:41 IST

கரூர்,

கரூர் அருகே உள்ள காந்திகிராமம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் முகமது பரீத் (வயது49). இவர் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி நஸ்ரின் பானு (39) இவர்களுக்கு ஜகிந்நாஜ் (16)என்ற மகளும் தன்வீர் (9 )என்ற மகனும் உள்ளனர்.

இதில் ஜகிந்நாஜ் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது பரீத் போக்குவரத்து நகரில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இதற்காக வங்கிகளில் அவர் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மணமுடைந்து காணப்பட்ட முகமதுபரீத் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முகமதுபரீத் மந்திரித்த தண்ணீர் எனக் கூறி மனைவி நஸ்ரின்பானு மற்றும் ஜகிந்நாஜ் ஆகியோருக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு அவரும் அதை குடித்துள்ளார்.

பின்னர், முகமதுபரீத் அவரது உறவினர் ஒருவருக்கு போன் செய்து விஷம் குடித்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அதன் பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜகிந்நாஜ் உயிரிழந்தார். இதனை அடுத்து முகமதுபரீத் மற்றும் நஸ்ரின்பானு ஆகியோரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதில் வரும் வழியிலேயே முகமதுபரீத் பரிதாபமாக உயிரிழந்தார். நஸ்ரின்பானு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தாந்தோணி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்