தேசிய நெடுஞ்சாலை இடையே சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலை இடையே சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
உடையார்பாளையம்:
அணுகுசாலையில் தடுப்புகள்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 11, 12, 14 ஆகிய வார்டுகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டுகளில் உள்ளவர்கள் விவசாய நிலங்களுக்கு மூலப்பொருள் எடுத்து செல்லவும், விளை பொருட்களை கொண்டு வரவும் சோழங்குறிச்சி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சோழங்குறிச்சி, அழிசுகுடி, பருக்கல், வாத்திகுடிகாடு, காக்காபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக உடையார்பாளையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அணுகுசாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சோழங்குறிச்சி சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் 11, 12, 14 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சோழங்குறிச்சி சாலை அருகே உள்ள மயானத்திற்கு, இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல அருகே உள்ள தெருக்கள் வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
விபத்துகள் ஏற்படுகிறது
ஆண்டுதோறும் சோழங்குறிச்சி சாலை அருகே உள்ள அய்யனார் கோவில் திருவிழாவின்போது சாமி வீதி உலா உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 3 வார்டுகளுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் உடையார்பாளையத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணி நிறைவடைந்து தினமும் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன.
உடையார்பாளையம் வாரச்சந்தையில் இருந்து வேலப்பசெட்டி ஏரிகரை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இருபுறமும் அணுகுசாலை அமைக்கப்பட்டு, சாலையோரம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டும் என்பதால், நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
சுரங்கப்பாதை
எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உடையார்பாளையத்தில் இருந்து சோழங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் வருகிற 25-ந் தேதியன்று உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.