வளர்ச்சி திட்டப்பணிகள்

வளர்ச்சி திட்டப்பணிகள்

Update: 2022-09-23 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி, மன்னார்குடி வட்டாரத்திற்குட்பட்ட மேலதிருபாலக்குடி, தென்பாதி ஆகிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு, மன்னை நகரில் உள்ள ஜெயங்கொண்டநாதர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு உணவின் அளவீடு மற்றும் தரத்தினை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட தாமரைக்குளத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு, பணிகள் குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.

பயனாளியிடம் கலந்துரையாடல்

மன்னார்குடி வட்டாரத்திற்குட்பட்ட மேலதிருபாலக்குடியில் ரூ.76 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், மேலதிருபாலக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் மிதிவண்டி நிழலகம் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மன்னார்குடி வட்டம், தாதன்திருவாசல் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதையும் இந்த திட்டத்தின் கீழ் மருந்து பெறும் பயனாளியிடமும் கலந்துரையாடினார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சடையப்பன், மன்னார்குடி நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன், மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், பக்கிரிசாமி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்