ரூ.27¼ கோடியில் வளர்ச்சிப்பணிகள்

விழுப்புரம் நகராட்சியில் ரூ.27¼ கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வது என நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்திக்அலி, ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசியதாவது:-

மணவாளன் (தி.மு.க.) :- நகரமன்ற கூட்டத்திற்கான தீர்மானத்தில் 30 சதவீதம் மட்டுமே மக்கள் பிரச்சினைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத நிதி, நகராட்சி அலுவலகம், அலுவலர்கள், ஓய்வுபெற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நகராட்சியின் பொதுநிதியை அதிகம் பயன்படுத்துங்கள். கொசு மருந்து தெளிக்கும் எந்திரம் காட்சிப்பொருளாக இருக்கிறது. அதை பயன்படுத்தி கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினை

கோல்டுசேகர் (அ.தி.மு.க.) :- 1-வது வார்டில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினையை உடனடியாக போக்க வேண்டும்.

ராதிகா செந்தில் (அ.தி.மு.க.) :- விழுப்புரத்தில் ரூ.2½ கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மீன் மார்க்கெட்டை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மாதந்தோறும் நகரமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்.

சாலைப்பணிகள்

இளந்திரையன் (பா.ம.க.) :- 37-வது வார்டு ராஜா நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.

புருஷோத்தமன் (தி.மு.க.) :- மாதந்தோறும் கூட்டம் நடத்தாதது ஏன்? என்று விளக்கம் அளியுங்கள்.

சுரேஷ்ராம் (காங்கிரஸ்) : சாலைப்பணிகளை தரமாக அமைக்க வேண்டும். சில இடங்களில் தரமற்ற முறையில் பணிகள் நடக்கிறது. இதனால் தி.மு.க. ஆட்சிக்குத்தான் அவப்பெயர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீர்மானம்

இதற்கு பதிலளித்து நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பேசுகையில், கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் அலட்சியமாக இருக்காமல் பதில்கூற வேண்டும் என்றார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், நகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்தல், சாலைப்பணிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சீரமைப்பு பணிகள், 15-வது நிதிக்குழுவில் மின்விளக்கு வசதி பணிகள் மேற்கொள்ளுதல் என ரூ.27.37 கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் நந்தா நெடுஞ்செழியன், ஜெயந்தி மணிவண்ணன், நவநீதம் மணிகண்டன், ஜெயப்பிரியா சக்திவேல், இம்ரான்கான், கலை, வடிவேல் பழனி, ரியாஸ் அகமது, வித்தியசங்கரி பெரியார், மெரீனா சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்