மாரடைப்பால் மரணம் அடைந்ததிருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் தகனம்;இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மாரடைப்பால் மரணம் அடைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2023-01-05 21:41 GMT

மாரடைப்பால் மரணம் அடைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

எம்.எல்.ஏ. மரணம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெரா நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு, காந்தி, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் இருந்தனர்.

இதுபோல் கட்சி வேறுபாடு இன்றி அனைத்து கட்சிகளில் இருந்தும் பிரமுகர்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக நல அமைப்பினர் என்று திரண்டு வந்து மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அஞ்சலி

அவரது உடல் நேற்றும் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலையில் இருந்தே காங்கிரஸ் தொண்டர்கள், தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் திரளாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு மற்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரும் நேற்று காலையில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜி.கே.வாசன்

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பகல் 12.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேரில் வந்து மறைந்த திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து இறுதி சடங்குக்கான நிகழ்வுகள் தொடங்கின.

கண்ணீர்

திருமகன் ஈவெரா உடலை இறுதியாக அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்த்து கண்ணீர் விட்டு கதறினார்கள். உடன் இருந்த தொண்டர்கள், நண்பர்கள், சகோதராக பழகியவர்கள் தேற்ற யாரும் இன்றி கண்ணீர் விட்டனர்.

பின்னர் அவரது உடலை கண்ணாடி பேழையில் இருந்து வெளியே எடுத்து ஸ்டெரச்சரில் வைத்து உறவினர்கள், நண்பர்கள், தொண்டர்கள் வீட்டின் உள்ளே இருந்து தோளில் சுமந்து கொண்டு வந்தனர். திருமகன் ஈவெராவின் உடலில் கை ராட்டை சின்னம் பொறித்த காங்கிரஸ் மூவர்ண கொடி போர்த்தப்பட்டு இருந்தது.

ஊர்வலம்

அவரது உடல் அமரர் ஊர்தியில் வைக்கப்பட்டது. ஊர்தியில் தாயார் வரலட்சுமி, தம்பி சஞ்சய் சம்பத், மனைவி பூர்ணிமா, மகள் சமணா மற்றும் நெருங்கிய உறவினர்கள் உடன் சென்றனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காரில் சென்றார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நடந்தும், காரிலும், மோட்டார் சைக்கிள்களிலும் ஊர்வலமாக சென்றனர். குடியரசு இல்லத்தில் தொடங்கிய இறுதி ஊர்வலம் கச்சேரி வீதி, பன்னீர்செல்வம் பூங்கா, கடைவீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, காவிரி ரோடு வழியாக கருங்கல்பாளையம் ஆத்மா மின் மயானத்தில் நிறைவடைந்தது.

இறுதி ஊர்வலம் நடந்த சாலையை ஒட்டி கடைகள் அனைத்தும் எம்.எல்.ஏ.வுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு கனி மார்க்கெட் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பெரிய கடைகள், நிறுவனங்களும் அடைக்கப்பட்டு, தொழிலாளர்கள், பணியாளர்கள் கடைகளுக்கு வெளியே நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

உடல் தகனம்

அங்கு மின் மயானத்தில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது கூடிஇருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். காங்கிரஸ் சேவா தள பிரிவை சேர்ந்த தொண்டர்கள் சீருடையில் வந்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மயான வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, அ.கணேசமூர்த்தி எம்.பி., முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. திருப்போரூர் பாலாஜி, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வி.பி.ராஜமாணிக்கம், முன்னாம் எம்.பி.யும் பா.ஜனதா மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட தலைவர் வேதானந்தம், மாநில கொள்கை பிரசார அணி நிர்வாகி ஆறுமுகம், வக்கீல்.என்.பி.பழனிச்சாமி, தே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் ஆகியோர் எம்.எல்.ஏ.வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் பேசினார்கள்.

நல்ல தலைவர்

கூட்டத்தில் பேசிய பெரும்பாலானவர்கள், தமிழ்நாடு தந்தைபெரியாரைப்போன்ற ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டது என்று குறிப்பிட்டு பேசினார்கள். கூட்டத்தை ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன் வழிநடத்தினார்.

இறுதி சடங்கு நிகழ்வுகளில் எம்.சுப்பராயன் எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), ராஜேஸ்குமார் (கிள்ளியூர்), விஜயதாரணி (விளவங்கோடு), சதாசிவம் (மேட்டூர்), அப்துல்சமது, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்லமுத்து, கே.எஸ்.தென்னரசு, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன், செயலாளர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், த.சண்முகம், எஸ்.டி.பிரபாகரன், வக்கீல் ராதாகிருஷ்ணன், சி.டி.வெங்கடேஸ்வரன், ம.தி.மு.க. முருகன், ப.சீ.நாகராஜன், ரா.மனோகரன், கிருஷ்ணராஜ், செ.நல்லசாமி, ஈ.பி.ரவி. எஸ்.வி.சரவணன், கோபி, ஜவகர், விஜயபாஸ்கர், ராஜேஸ், விஜயகண்ணா, கே.என்.பாஷா, முகமது அர்சத், ஆ.செந்தில்குமார், செல்லப்பொன்னி, சின்னையன், மணிராஜ், திருவாசகம், பொ.ராமு, து.சந்திரசேகர், சாம்ராட் அசோக், கொங்கு கோவிந்தராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்