2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகள் பொருட்கள் கண்டுபிடிப்பு
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகள் மற்றும் சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன;
விழுப்புரம்
பானை ஓடுகள் கண்டுபிடிப்பு
விழுப்புரம் அருகே உள்ளது பிடாகம் குச்சிப்பாளையம் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, தமிழழகன் ஆகியோர் அளித்த தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், பேரங்கியூர்- பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் மற்றும் சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை
தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பில் கள ஆய்வு செய்தபோது கருப்பு, சிவப்பு, கருப்பும் சிவப்பும் கலந்தது என 3 வகையான பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. கருப்பு நிற பானை ஓடுகளில் பள்ளவரி எனப்படும் அலங்கார கோடுகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவை ஆற்றின் மேற்குப்பகுதியில் இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த பானை ஓடுகள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். இதனை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த தொல்லியலாளர் துளசிராமன் உறுதிப்படுத்தி உள்ளார்.
சுடுமண் தண்ணீர் குழாய்
தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு ஆய்வில் மண்ணால் ஆன சுடுமண் தண்ணீர் குழாயின் ஒரு பகுதி, மிகச்சிறிய மட்கலயம், மட்கலயம் ஒன்றின் மூடி, சுடுமண் தக்களி, சுடுமண் கெண்டியின் மூக்குப்பகுதி, உடைந்த சுடுமண் கலயத்தின் விளிம்புப்பகுதி ஆகிய பொருட்களும் கண்டறியப்பட்டன. இந்த சுடுமண் பொருட்களும், பானை ஓடுகளின் காலத்தை சேர்ந்தவை ஆகும். அதாவது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தினால் மேலும் பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.