தீவுத்திடலில் பொருட்காட்சி நடத்த வெளியிடப்பட்ட டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தீவுத்திடலில் பொருட்காட்சி நடத்த வெளியிடப்பட்ட டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2022-12-20 18:52 GMT

சென்னை,

சென்னை தீவுத்திடலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை கடந்த அக்டோபர் 31-ந்தேதி தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டது.

இந்த டெண்டரில் பங்கேற்ற பெங்களூரூவைச் சேர்ந்த பன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் நிறுவனம், தங்களது பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் டெண்டரை இறுதி செய்துள்ளதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, டெண்டரை இறுதி செய்யக்கூடாது என கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 'மனுதாரர் நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு அரசுக்கு செலுத்தவேண்டிய தொகை ரூ.3 லட்சத்தை செலுத்தாததால் டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு வெளியிட்டுள்ள டெண்டர் நிபந்தனையில், பாக்கித்தொகை வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்துகொள்ள முடியாது என தெளிவாக கூறியுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்' என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்