'இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்டது தி.மு.க. ஆட்சி தான்'

‘இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்டது தி.மு.க. ஆட்சி தான்’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

Update: 2023-04-24 19:30 GMT

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சி பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தல் நேரத்தில் தி.மு.க. 525 வாக்குறுதிகளை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது. இதில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தற்போது 75 லட்சம் பேருக்கு தான் உரிமை தொகை வழங்க கணக்கெடுத்துள்ளனர். அவர்களுக்கும் பணம் கொடுப்பார்களா? இல்லையா? என யாருக்கும் தெரியாது. இதுபோன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த எந்த வாக்குறுதிகளும் முறையாக நிறைவேற்றப்படவில்லை.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு லஞ்ச லாவண்யத்தின் ஒட்டு மொத்த உருவமாக தி.மு.க. திகழ்கிறது. இதுமட்டுமின்றி இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்டது தி.மு.க. ஆட்சி தான் என்பதை மக்கள் அறிவார்கள். அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தற்போது தீவிரமாக நடக்கிறது. மகளிர் அணி மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை அணிக்கான உறுப்பினர் சேர்க்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) 5-ந்தேதிக்குள் உறுப்பினர்களை சேர்த்து அதற்கான படிவங்களை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி. பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தென்னம்பட்டி பழனிசாமி, பி.கே.டி.நடராஜன், பிரேம்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்