மருத்துவத்துறையில் தலைமைப் பதவி காலி பணியிடங்கள்: தி.மு.க. ஆட்சியில் நிலவும் வேதனை - ஓபிஎஸ்

மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்கள் காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும் செயல் என பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.;

Update:2023-01-30 09:19 IST

சென்னை,

ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் அளவினை நிர்ணயிப்பதிலும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகத் திகழ்வதிலும், முக்கியப் பங்கு வகிப்பது மக்கள் நல்வாழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.

இதன் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பினை அளித்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்தல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

ஆனால், பெரும்பாலான மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்களே காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் திறமையின்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் இயங்கும் முக்கியமான இயக்குநரகங்களான மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் ஆகியவற்றிற்கான தலைமைப் பதவிகள் எல்லாம் கூடுதல் பொறுப்பில் உள்ள நிலையில், இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளரிடமும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும், மாண்புமிகு முதலமைச்சரிடமும் பலமுறை மனுக்களை அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் பதவியை வகிப்பவர் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார் என்றும், ஏற்கெனவே 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நிர்வகித்து வரும் முதல்வரால் பல மருத்துவக் கல்லூரிகளை மேற்பார்வையிடுவது என்பது மிகுந்த சிரமம் என்றும், இதேபோன்று ஏற்கெனவே குடும்ப நலத் துறை இயக்குநர் பொறுப்பை வகித்து வருபவரிடம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநர் பதவியும் கூடுதல் பொறுப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஏற்கெனவே வேலைப்பளு அதிகமாக இருக்கின்ற நிலையில், அவர்களை இயக்குநர்களாக நியமிக்கும் பட்சத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணிகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் பதவியே காலியாக உள்ளது. பொதுவாக, எந்தெந்த இயக்குநர் பணியிடங்கள் எப்போது காலியாகின்றன என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். இந்தச் சூழ்நிலையில், இயக்குநர் பதவிகள் வகிப்பவர்களின் ஒய்வுக்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரே அந்த இடத்திற்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கையை அரசு துவங்கியிருந்தால், முக்கியமான இயக்குநர் பதவிகள் இன்று காலியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவரின் பணிக்காலம் ஏற்கெனவே ஓராண்டு நீட்டிக்கப்பட்ட நிலையில், தகுந்த நபரை தேடுதல் குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து வேறு ஒருவரை இந்த ஆண்டு முதல் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும்.

ஆனால், இன்னும் தெரிவுப் பணியே துவங்காத நிலைமை நிலவுகிறது. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கின் காரணமாக, மருத்துவச் சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இல்லந்தேடி மருத்துவம் என்று தி.மு.க. அரசு சொன்னாலும், யதார்த்தத்தில் மருத்துவமனை தேடிச் சென்றாலே மருத்துவம் இல்லை என்ற அவல நிலைதான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. தி.மு.க. அரசின் திறமையின்மை காரணமாக பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய மக்கள்தான்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவத் துறைகளின் இயக்குநர் பணியிடங்களை முறையாக நிரப்பவும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியினை நிரப்பவும், காலியாகவுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்பவும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்