சேலம் அருகே கனமழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு

சேலம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-23 09:00 GMT

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ். இவர் பிளாஸ்டிக் கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு திரும்பிய செந்தமிழ், தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். கடந்த சில நாட்களாக சேலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அவரது வீட்டின் சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை பெய்துள்ளது. இதில் இன்று அதிகாலை 3 மணி அளவில் செந்தமிழ் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த செந்தமிழ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கட்டிட இடிபாடுகளை அகற்ற தொடங்கினர். மேலும் இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் செந்தமிழ் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்