தயாரிப்பை நிறுத்தியதால் செங்கல் விலை கடும் உயர்வு
சின்னத்தடாகம் பகுதியில் சூளைகளில் தயாரிப்பை நிறுத்திய தால் செங்கல் விலை கடும் உயர்ந்து உள்ளது. இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.;
துடியலூர்
சின்னத்தடாகம் பகுதியில் சூளைகளில் தயாரிப்பை நிறுத்திய தால் செங்கல் விலை கடும் உயர்ந்து உள்ளது. இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
செங்கல் தயாரிப்பு
கோவையை அடுத்த சின்னதடாகம், ஆனைக்கட்டி, மாங்கரை, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம். பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தன. இங்கு தினமும் பல லட்சம் செங்கல் தயாரிக்கப்பட்டது.
அவை, தரமாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருந்ததால் நல்ல வரவேற்பு இருந்தது.
மேலும் சின்னத்தடாகம் பகுதியில் தயாரிக்கப்பட்ட செங்கல் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
அந்த காலகட்டத்தில் 3 ஆயிரம் செங்கல் கொண்ட ஒரு லோடு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையே இருந்தது. ஆனால் தற்போது 3 ஆயிரம் செங்கல் விலை ரூ.36 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.
தற்போது சின்னத்தடாகம் பகுதியில் செங்கல் தயாரிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தாராபுரம், பழனி, அந்தியூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு செங்கல் கொண்டு வரப்படுகிறது.
விலை கடும் உயர்வு
இது குறித்து செங்கல் உற்பத்தியாளர் சங்க கவுரவ தலைவர் பழனிசாமி கூறியதாவது:-
சின்னத்தடாகம் பகுதியில் செங்கல் தயாரிப்பில் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், ஒரு லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டு வந்தனர். திருநெல்வேலி, மதுரை, தர்மபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் 40 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.
தற்போது சின்னத்தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளில் தயாரிப்பை நிறுத்தியதால் செங்கல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கட்டுமான பணிகளும் பாதிக்கப் பட்டு உள்ளன.
வீடு கட்டும் செலவு அதிகரித்து உள்ளது. பலரின் வீடு கட்டும் கனவு கனவாகி விடும் நிலை உள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் உள்பட பலரும் வேலை இழப்பு ஏற்படுகிறது.
வருமானம் இழப்பு
செங்கல் தயாரிக்க ஒரு நாளைக்கு 20-ல் இருந்து 40 லோடு விறகு வெளி மாவட்டத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும். அதில் ஈடுபட்ட டிரைவர் உள்ளிட்ட தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளனர்.
இதனால் சின்னத்தடாகம் பகுதியில் இருந்த 5 பெட்ரோல் பங்குகளில் 2-ஐ மூடும் நிலையில் உள்ளது. மேலும் செங்கல் தொழிலை நம்பி அந்த பகுதியில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் வருமானம் இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பல செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான செங்கல்கள் வீணாகி வருகிறது. அவற்றை மீண்டும் எடுத்து பயன்படுத்த இடைக்கால அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் செங்கல் சூளைகளில் இருந்த மோட்டார் பம்ப் மற்றும் எந்திரங்கள் திருட்டு போகிறது. இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது.
காப்பாற்ற வேண்டும்
செங்கல் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கு வதற்கு வாங்கிய கடன் கட்ட முடியாத நிலை உள்ளது.
எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி செங்கல் தொழிலை யும், தொழிலாளர்களையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல் தொழில் மீண்டும் நடைபெற ஏதுவாக தமிழக முதல்- அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிப்பு இல்லை
இது குறித்து சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தரவடிவு ஆனந்த் கூறியதாவது:-
செங்கல் சூளைகளால் சின்னதடாகம் சுற்று வட்டார பகுதிக ளில் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் ஏற்பட வில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்து உள்ள அனைத்து வழிமுறைகளும் பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தான் செங்கல் தயாரிக்கிறார்கள்.
செங்கல் தொழில் நடைபெற்ற போது தொழில்வரி, அரசுக்கு கனிமவளத் துறையின் வரி மற்றும் ஜி.எஸ்.டி. செலுத்தப்பட்டு வந்தது.
தற்போது அரசுக்கு வரும் வரி வருவாய் முற்றிலும் தடைபட்டு இழப்பு ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விறகு வியாபாரம்
விறகு வியாபாரி கணேசன் கூறியதாவது:-
செங்கல் தயாரிக்க மிகவும் அத்தியாவசிமானது விறகுகள். நெல்லை, ராமநாதபுரம், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விறகுகளை கோவைக்கு லாரிகளில் கொண்டு வருவோம்.
இதன் மூலம் டிரைவர்கள், தொழிலாளர்கள் பலர் வேலை வாய்ப்பு பெற்றனர். தற்போது சின்னத்தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் இயங்காததால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
விறகு கொண்டு வர பயன்படுத்தப்பட்ட லாரி உள்ளிட்ட வாகனங்கள் முடங்கி கிடக்கிறது.
அவற்றை வேறு வேலைக்கு பயன்படுத்த அவற்றின் வடிவமைப்பை மாற்ற வேண்டி உள்ளது. இதனால் வருமானம் இல்லாத நிலையில் கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது.
எனவே வாகனங்களில் விறகு ஏற்றி வரும் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காக்க செங்கல் சூளைகள் மீண்டும் செயல்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.