புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

Update: 2023-09-22 13:08 GMT

சென்னை, துரைப்பாக்கம் ரேடியல் சாலைப்பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், அடையாறு தாமோதரபுரம் புதிய தெருவில் ஒரு வீட்டை கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக பெசன்ட் நகரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் சமீபத்தில் அவர் விண்ணப்பித்தார்.அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மின்வாரிய இளநிலை என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மின் இணைப்பு வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார். மேலும் முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணகுமார், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில், பாலசுப்பிரமணியன் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை கிருஷ்ணகுமாரிடம் கொடுத்து, அதை பாலசுப்பிரமணியனிடம் லஞ்சமாக வழங்கும்படி கூறினர். அதன்படி கிருஷ்ணகுமார், மின்வாரிய அலுவலகம் சென்றார். அங்கு அவரிடம், அதிகாரி பாலசுப்பிரமணியன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்