பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் விசாரணை குழுவின் ஆய்வு நீட்டிப்பு

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் விசாரணை குழுவின் ஆய்வு நீட்டிக்கப்பட்டது.

Update: 2022-06-16 18:09 GMT

பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த குமரிமன்னன், ராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் குமரிமன்னன் அங்கு பணியிட மாற்றமாகி செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி குமரிமன்னன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் பெரம்பலூர் நகராட்சியில் குமரிமன்னன் ஆணையராக பணிபுரிந்த காலத்தில், அவரால் கையாளப்பட்ட கோப்புகளின் ஆவணங்களை ஆய்வு செய்து, அதில் குறைபாடுகள் அல்லது முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்பதை கண்டறிந்து 3 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையிலான விசாரணை குழுவினர் கடந்த 14-ந்தேதி முதல் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்ய தொடங்கினர். 3-வது நாளாக நேற்றும் விசாரணை குழுவில் உள்ள 5 பேர் வந்து நகராட்சி அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே அவர்கள் நகர்ப்பகுதியில் குமரிமன்னனால் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டு கட்டப்பட்ட 3 கட்டிடங்களையும் மற்றும் 3 காலி மனைகளையும் விசாரணை குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, அதில் ஏதும் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

3 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை குழுவினர் ஆய்வு நேற்று முடியவடையவில்லை. இன்னும் சில கோப்புகளின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படாமல் இருப்பதால் விசாரணை குழுவினரின் ஆய்வு நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் ஆய்வு முடிந்து அறிக்கையை விசாரணை குழுவினர் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையாவிடம் சமர்ப்பிக்க உள்ளனர். முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தால் குமரிமன்னனிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்