போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் 'கியூ-ஆர்' கோடு மூலம் அபராதம் வசூலிக்கும் வசதி

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் ‘கியூ-ஆர்’ கோடு மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய நடைமுறையை கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-05 06:02 GMT

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணமில்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது. 'டெபிட்', 'கிரெடிட்' கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் 'இ-சலான்' கருவியில் உடனடியாக அபராதத்தை செலுத்திவிடுகின்றனர். இந்த கார்டு இல்லாதவர்களை அரசு 'இ-சேவை' மையம், தபால்நிலையங்களுக்கு சென்று அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால், 'தற்போது தப்பித்துவிட்டோம், எதற்கு அபராதம் செலுத்த வேண்டும்' என்ற மனநிலையில் வாகன ஓட்டிகள் மத்தியில் இருக்கிறது. இவ்வாறு உள்ள வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை வசூல் செய்யும் நடவடிக்கையாக 12 போலீஸ் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்கள்) திறக்கப்பட்டன. இந்த மையங்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் சாலையோர கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை செல்போன் செயலியில் 'கியூ-ஆர்' கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி இருப்பது போன்று, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் 'பேடிஎம்' 'கியூ-ஆர்' கோடு மூலம் அபராதம் பெறும் வசதி சென்னை போக்குவரத்து போலீசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த வசதியை தொடங்கி வைத்தார். மேலும் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளுக்கு பணம் செலுத்தும் லிங்குடன் கூடிய எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பும் வசதியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர், துணை கமிஷனர் குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (திட்டமிடல்) ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

'கியூ-ஆர்' கோடு மூலம் அபராதம் வசூல் செய்யும் நடைமுறை குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வசதி மிகவும் எளிமையானது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் உடனடியாக அபராத தொகை பெற முடியும். இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை அரசு கருவூலத்துக்கு நேரடியாக சென்று விடும். தற்போது 350 'கியூ-ஆர்' கோடு அட்டைகள் வந்துள்ளது. முதற்கட்டமாக 300 போக்குவரத்து போலீசாருக்கு இந்த அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை வசூலிக்கும் அழைப்பு மையங்களிலும் இந்த 'கியூ-ஆர்' கோடு அட்டை வைக்கப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

=========

Tags:    

மேலும் செய்திகள்