குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-07 11:27 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திருவண்ணாமலை உதவி கலெக்டர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மதியம் 12.30 மணி வரை காத்திருந்த விவசாயிகள் திடீரென வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வருகை தராத அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் விவசாயிகள் மதிய உணவு வாங்கி வந்து அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்களிடம் தாசில்தார் சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் உடன்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தாசில்தார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து உதவி கலெக்டர் மந்தாகினி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது உதவி கலெக்டர் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு விரைவில் மறு கூட்டம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்