விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரூ.25 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.25 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

Update: 2023-04-30 09:27 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, ராபிப் பருவத்தில் பச்சைபயறு தனிப்பயிராக 9624.89 எக்டேர் பரப்பிலும், நெல் தரிசில் பயறுவகை சாகுபடி திட்டத்தின் கீழ் 553.20 எக்டேர் பரப்பிலும் ஆக மொத்தம் 10,178.09 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.4.80 வீதம் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு ரூ.77.55 என்ற விலைக்கு விவசாயிகளிடமிருந்து ஒரு ஹெக்டருக்கு 384 கிலோ பச்சைப்பயறு வீதம் 1200 மெ.டன் அளவிற்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி 29-05-2023 -க்குள் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்தார்.

கூட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பாக 2 விவசாயிகளுக்கு தலா ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டிலான 2 டிராக்டர்களும், 2 விவசாயிகளுக்கு தலா ரூ2.33 லட்சம் மதிப்பீட்டிலான 2 பவர் ட்ரில்லர்களும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள 4 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 4 ஆதரவற்ற விதவைகளுக்கு கூட்டுறவுத்துறை மூலமாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் 4 லட்சம் கடன் உதவிகள் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ25.66 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்