நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு

பெண்ணாடத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் எதிர்ப்பு தொிவித்தனர்.

Update: 2023-08-24 19:38 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் பேரூராட்சிக்கு சொந்தமான முக்குளம் ஏரிக்கரையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து 15 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். மேலும் சிலர் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த 13 வீடுகளை வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மீதமுள்ள 2 வீடுகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் அல்லது கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மீதமுள்ள 2 வீடுகள் மற்றும் கரும்பு பயிர்கள் அகற்றப்படவில்லை. மேலும் வீடுகளை காலி செய்ய அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் வீடுகளை அகற்றவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பெண்ணாடம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) மயில்வாகனம், பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். இதுபற்றி அறிந்த 2 வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இன்னும் 2 நாட்களில் வீடுகள் மற்றும் கரும்பு பயிர்களை அகற்ற வேண்டும் என்று கூறினர். இதையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்