எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடையே தள்ளு முள்ளு

மன்னார்குடியில், ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Update: 2022-12-05 18:48 GMT

மன்னார்குடி;

மன்னார்குடியில், ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.மன்னார்குடியில் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணியினர், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் அ.ம.மு.க. சார்பில் கோபால சமுத்திரம் தெற்கு வீதி சந்திப்பில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பேனர்களை அகற்ற

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் தலைமையில் அமைதி ஊர்வலமாக சென்று ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திருவாரூர் மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமையில் வந்தனர்.அப்போது சிலைக்கு அருகில் அ.தி.மு.க எடப்பாடி அணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 2் பேனர்கள் இடையூறாக இருப்பதாக கூறி பேனர்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

தள்ளு முள்ளு

அப்போது அங்கு இருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அங்கு வந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் அண்டோ, இருதரப்பையும் சமாதானம் செய்தார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்