மலைத்தேனீக்கள் கொட்டி நிதி நிறுவன அதிபர் சாவு?
மடத்துக்குளத்தையடுத்த கடத்தூரில் மலைத்தேனீக்கள் கொட்டியதால் நிதி நிறுவன அதிபர் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
போடிப்பட்டி
மடத்துக்குளத்தையடுத்த கடத்தூரில் மலைத்தேனீக்கள் கொட்டியதால் நிதி நிறுவன அதிபர் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனீக்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த குருவன்வலசு பகுதியை சேர்ந்தவர் சோலைமுத்து (வயது 37). கணியூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தினசரி கடத்தூர் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் சாமிதரிசனம் செய்ய வந்தார்.
அங்கு கோவில் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு அமராவதி ஆற்றில் கால் அலம்ப சென்றார். பின்னர் கால்அலம்பி விட்டு அங்கிருந்து வலியால் அலறியபடி ஓடிவந்த சோலைமுத்து தேனீக்கள் கொட்டி விட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது அவருடைய தலையில் சில தேனீக்கள் கடித்துக் கொண்டிருந்ததாகவும் அங்கே இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாவு
உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கணியூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தூர் ஈஸ்வரன் கோவில் அருகிலுள்ள மரத்திலிருந்த ராட்சச மலைத் தேனீக்களின் கூடு தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் அழிக்கப்பட்டது. துடி துடித்து உயிரிழந்த நிதிநிறுவன அதிபர் தேனீக்கள் கொட்டியதால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். நிதி நிறுவன அதிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-----------------