திண்டுக்கல்லில் நள்ளிரவில் தீ விபத்து; இனிப்பு கடை எரிந்து நாசம்

திண்டுக்கல்லில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இனிப்பு கடை எரிந்து நாசமானது.

Update: 2023-10-21 21:30 GMT

திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53). இவர் திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையம் அருகே இனிப்பு தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் ஆயுதபூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் பல்வேறு வகையான இனிப்புகள் தயாரிக்கும் பணி நடந்தது. இதையடுத்து இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இதற்கிடையே நள்ளிரவு கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி மாவட்ட அலுவலர் சிவகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 2 லாரிகளில் விரைந்து வந்தனர். அதற்குள் இனிப்பு கடை தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரித்தனர். அதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. கடையும் சேதம் அடைந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்