முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவர் நல மாநாடு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் மீனவர் நல மாநாட்டுக்கு தலைமை தாங்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

Update: 2023-08-17 18:45 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் மீனவர் நல மாநாட்டுக்கு தலைமை தாங்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

முரசொலி மாறன் படத்துக்கு மரியாதை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணத்துக்காக நேற்று முன்தினம் மதுரை வந்தார். முனிச்சாலை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் நிறுவிய பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் இரவில் மதுரையில் தங்கிய அவர், நேற்று காலையில் காரில் ராமநாதபுரம் புறப்பட்டார்.

செல்லும் வழியில் சிலைமான் கிராமத்தில், அண்ணா மன்றத்தில் முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் 90-வது பிறந்த நாளையொட்டி அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டார். வழிநெடுகிலும் முதல்-அமைச்சருக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

ராமநாதபுரத்தில் பேராவூர் கிராமத்தின் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க.வினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

தேர்தல் வெற்றிக்காக ஒவ்வொருவரும் தினமும் பணியாற்ற வேண்டும் என்றும், 40 தொகுதிகளிலும் வெல்வதை லட்சியமாக வைத்து செயல்பட வேண்டும், உங்களுக்கான அங்கீகாரத்தை கட்சி வழங்கும் என சூளுரைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று மாலையில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் சென்றார். அங்கு தனியார் ஓட்டலில் இரவு தங்கினார்.

மீனவர்கள் நல மாநாடு

இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு, மண்டபம் வருகிறார். அங்கு முகாம் அருேக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் மீனவர்கள் நல மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காலை 10 மணிக்கு தமிழக அரசு சார்பில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மண்டபத்தில் இன்று நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் பங்கேற்று மீனவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 4,184 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ரூ.24 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரத்து 315 மதிப்பீட்டிலும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 1,299 பயனாளிகளுக்கு மானியத்தில் படகு கட்டுதல் மற்றும் (பி.எம்.எம்.எஸ்.ஒய்) நலத்திட்ட உதவிகளும், 6 ஆயிரத்து 608 ெபண்களுக்கு மகளிர் நலத்திட்டங்கள் உள்பட மொத்தம் 13 ஆயிரத்து 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரத்து 609 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மாநாட்டுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்