வரலட்சுமி நோன்பையொட்டிஓசூரில் பூக்கள் விலை உயர்வுமல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

Update: 2023-08-24 19:00 GMT

ஓசூர்:

வரலட்சுமி நோன்பையொட்டி ஓசூரில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200-க்கு விற்றது.

வரலட்சுமி நோன்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வரலட்சுமி நோன்பு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பகுதிகள் கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளில் உள்ளதால் அந்த மாநிலங்களில் கொண்டாடப்படுவதை போன்று, பெண்கள் இங்கும் வரலட்சுமி நோன்பை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் வரலட்சுமி நோன்பையொட்டி ஓசூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. மேலும் பூக்களின் விலை, வழக்கத்தை விட உயர்வாக இருந்தது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,200-க்கும், கனகாம்பரம் ரூ.1,800-க்கும், சாமந்தி ஒரு கிலோ ரூ.240-க்கும், பட்டன் ரோஸ் ஒரு கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

எனினும் விலை உயர்வை பொருட்படுத்தாமல் அதிகளவில் பூக்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். பூக்களின் விலை உயர்ந்து நல்ல லாபம் கிடைத்ததால், பூ வியாபாரிகளும், மலர் சாகுபடி செய்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் பழங்கள், தேங்காய், மா இலை, வாழைக்கன்று மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் ஜோராக நடைபெற்றது. இதன் காரணமாக ஓசூர் பஜார் தெரு, எம்.ஜி.ரோடு, தாலுகா அலுவலக சாலை, பாகலூர் ரோடு சர்க்கிள் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்