கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத் தீ

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது.

Update: 2023-01-12 19:00 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் வெப்பம் காரணமாக மலைப்பகுதியில் புல்வெளிகள், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இதனால் தனியார் தோட்டங்களில் காய்ந்த இலைகளை சுத்தம் செய்து தீ வைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சி அருகே தனியார் பட்டா நிலங்களில் திடீரென்று காட்டுத் தீப்பற்றியது. தீ மளமளவென பரவியது. இதில் அங்கிருந்த விலை உயர்ந்த மரங்கள் தீயில் எரிந்து கருகின. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். தீ வனப்பகுதிக்குள் பரவாமல் இருக்க, அவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி நள்ளிரவுக்குள் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தனியார் தோட்டங்களில் தீ வைப்பதற்கு வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சில தனியார் தோட்ட உரிமையாளர்கள் அனுமதி பெறாமல் தீ வைத்து வருகின்றனர். வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்