பிரபல நடிகை குறித்து அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி சர்ச்சை பேச்சு: இயக்குநர் சேரன் கண்டனம்

எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி அவதூறாக பேசும் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேரன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-20 09:58 GMT

சேலம்,

சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜு. இவர் சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். குறிப்பாக, வெங்கடாசலம், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பான ஆவணங்களை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய போதும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி செய்தியாளர்களிடம் பேசினார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கியது அ.தி.மு.க தலைமை. இந்த நிலையில் , செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜு, கூவத்தூரில் நடந்த சம்பவம் எனக் கூறி சில கருத்துகளை பகிர்ந்தார். இது திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரபல முன்னணி நடிகை குறித்த அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேச்சுக்கு இயக்குநர் சேரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் சேரன் இது தொடர்பாக கூறியதாவது: -அ.தி.மு.க. பிரமுகரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு உரிய பதில் கொடுப்பதுடன் தகுந்த நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்' என பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவுடன் நடிகர் சங்க தலைவர் விஷால், நடிகர் கார்த்தி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்