வடமதுரை ஒன்றிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

வடமதுரை ஒன்றிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-05-19 21:00 GMT

வடமதுரை அருகே உள்ள சித்துவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வடுகபட்டி, பாலக்குறிச்சி, தோப்புப்பட்டி, சீரங்ககவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று வடமதுரை ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பிறகு அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வீர கடம்பகோபுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், சித்துவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் ஏராளமானோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆட்கள் இல்லாததால் விவசாய தொழில் முடங்கியுள்ளது. பக்கத்து ஊராட்சியான, திருச்சி மாவட்டம் புதுவாடி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் சித்துவார்பட்டி பகுதியிலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளை செய்வதற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், சித்துவார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆய்வு செய்து விவசாய நிலங்களில் வரப்பு அமைத்தல், பண்ணைக்குழி அமைத்தல், நிலத்தை சமன் செய்தல் போன்ற பணிகளில் 100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்