பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைனில் முதலீடு
கோவை கணபதியை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 40). இவர் ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என இணையத்தில் தேடினார்.
அப்போது அவர், ஆன்லைனில் வந்த ஒரு வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அதில் பேசியவர் ஆன்லைனில் நீங்கள் முதலீடு செய்தால் முதலீட்டு தொகைக்கு ஏற்ப கமிஷன் அடிப்படையில் அதிக லாபம் பெற்றுத்தரப்படும் என்று கூறினார்.
இதை உண்மை என கலைச்செல்வி நம்பினார். பின்னர் அந்த ஆசாமி கலைச்செல்வியின் செல்போன் எண்ணுக்கு ஒரு இணைய தள முகவரியை அனுப்பினார். அதில் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்வது எப்படி? என செயல்முறை விளக்கம் உள்ளதாக கூறினார்.
ரூ.19 லட்சம் மோசடி
மேலும் முதலீடு செய்யும் தொகையை எப்போது வேண்டுமானா லும் கமிஷன் தொகையுடன் நீங்களே எடுத்து கொள்ளலாம் என்று அந்த ஆசாமி, கலைசெல்வியிடம் ஆசை வார்த்தை கூறினார்.
இதைத்தொடர்ந்து கலைச்செல்வி தனது 3 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.19 லட்சத்து 2 ஆயிரத்து 993-ஐ அந்த நபர் கூறியபடி ஆன்லைனில் முதலீடு செய்தார்.
ஆனால் அந்த ஆசாமி கூறியவாறு கமிஷன் தொகையை கொடுக்க வில்லை. போலியான இணையதள முகவரியை அனுப்பி அதில் ரூ.19 லட்சத்து 2 ஆயிரத்து 933-ஐ நூதன முறையில் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.
நம்ப வேண்டாம்
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, ஆன் லைனில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று யாரா வது கூறினால் நம்ப வேண்டாம். அவர்கள் அனுப்பும் போலி இணையதள லிங்குகளை கிளிக் செய்து உங்களின் தகவல்களை பதிவு செய்ய வேண்டாம்.
தற்போது லிங்க் அனுப்பி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றனர்.