ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக ரூ.48 ஆயிரம் நூதன மோசடி; மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஆலங்குளத்தில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.48 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-19 18:45 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழபரும்பு குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆலங்குளத்தில் தென்காசி சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க சென்றார். ஆனால் அவருக்கு பணம் எடுக்க தெரியாததால், அங்கு வந்த ஒரு நபரிடம் தனது ஏ.டி.எம். கார்ைட கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறி உள்ளார். அந்த நபரும் ஏ.டி.எம். கார்டை வாங்கி பணம் எடுக்க முயன்றார். பின்னர் பணம் வரவில்லை என்று கூறிவிட்டு ஒரு ஏ.டி.எம். கார்டை முருகனிடம் கொடுத்து விட்டு சென்றார். சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு முருகனின் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அதை அவர் தனக்கு தெரிந்த ஒருவரிடம் காண்பித்து விவரம் கேட்கவே, அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக அந்த நபர் தெரிவித்து உள்ளார்.

இதனால் பதறிப்போன முருகன் தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று புகார் தெரிவித்தார். அப்போது அவரது வங்கி கணக்கை சரிபார்த்த அதிகாரிகள், அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் ஆலங்குளம், கீழப்பாவூர், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் இருந்து ரூ.48 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். அப்போது முருகன் தான் பணம் எதுவும் எடுக்கவில்லை என்று கூறி உள்ளார். இதையடுத்து அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது, அது அவரது கார்டு இல்லை என்று தெரியவந்தது. அப்போது தான் மர்மநபர் பணம் எடுத்து தருவதாக கூறி அவரது ஏ.டி.எம். கார்டை வைத்துக்கொண்டு வேறு கார்டை அவரிடம் கொடுத்து விட்டு அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.48 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து முருகன் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர் பணம் எடுத்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்