விநாயகர் சிலை ஊர்வலம் இன்று நடக்கிறது

முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் இன்று நடக்கிறது.

Update: 2023-09-23 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் இன்று நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது. உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உள்பட 19 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

ஊர்வலம்

முன்னதாக மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவில் இருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக வந்து பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டை ஆசாத்நகருக்கு செல்கிறது.

பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து மிகவும் பதற்றமான பகுதியாக கருதப்படும் நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டி.ஐ.ஜி. ஜெயசந்திரன், திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.இதற்காக நேற்று சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் முத்துப்பேட்டையில் குவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்