விநாயகர் சிலைகள் ஊர்வலம்

மங்கலம்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-22 18:45 GMT

மங்கலம்பேட்டை

26 விநாயகர் சிலைகள்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

இந்த சிலைகளை 3-வது அல்லது 5-வது நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று காலை 10 மணி அளவில் மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

அப்போது விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் மேற்பார்வையில், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், கடலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் குமார், சைபர் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு, மாவட்ட குற்றப்பிரிவு தேவராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விருத்தாசலம் ஆரோக்கியராஜ், திட்டக்குடி காவ்யா, சேத்தியாத்தோப்பு ரூபன்குமார், இன்ஸ்பெக்டர்கள் மங்கலம்பேட்டை சந்திரசேகரன், விருத்தாசலம் முருகேசன், சமூக நீதிப்பிரிவு தீபா உள்பட 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 25 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 600-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் மங்கலம்பேட்டை, ரூபநாராயண நல்லூர், பள்ளிப்பட்டு, கோ.பூவனூர், புல்லூர், எம்.அகரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 26 விநாயகர் சிலைகள் லாரி, மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் தூக்கி வைக்கப்பட்டு, கடலூர் சில்வர்பீச்சில் கரைப்பதற்காக பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.

கடலில் கரைப்பு

மங்கலம்பேட்டை ஓட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த ஊர்வலமானது மங்கலம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாலையில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டது.

இதில் பா.ஜ.க. பிற்படுத்தப்பட்ட அணி மாநிலத்தலைவர் சாய் சுரேஷ், மாவட்டத் தலைவர் மணிகண்டன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், பிரச்சாரப்பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், இந்து முன்னணி நகர தலைவர் கமலக்கண்ணன், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் பரமசிவம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மணிகண்டன், விழாக்குழு கோவிந்தன், யோகேந்திரன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்