கூத்தாநல்லூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த 18-ந்தேதி, விநாயகர் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர், அந்தந்த பகுதிகளில் உள்ள வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறுகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கம்பர் தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. கூத்தாநல்லூர் நகர பகுதிகளில் உள்ள கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, தோட்டச்சேரி, கம்பர் தெரு, புதிய பஸ் நிலையம், மரக்கடை, கோரையாறு, மேல்கொண்டாழி, அதங்குடி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சக்தி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் லெட்சுமாங்குடியில் உள்ள வெண்ணாற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. சக்தி விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கூத்தாநல்லூர் நகர்பகுதி முழுவதும், கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.