அண்ணன், தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பல்பொருள் அங்காடி ஊழியரை கொலை செய்த அண்ணன், தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-04-07 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராஹீம் (வயது 45). இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 29-ந் தேதி மாலை அவர், அந்த பல்பொருள் அங்காடியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் வரதப்பன் நாயக்கன்தோப்பு பகுதியை சேர்ந்த ஞானசேகர் மகன்களான ராஜசேகர் (33), வல்லரசு (23) ஆகிய இருவரும் போதையில் அந்த கடைக்குள் புகுந்து தகராறு செய்தனர். இதை தட்டிக்கேட்ட இப்ராஹீமை அவர்கள் இருவரும் சரமாரியாக தாக்கியதோடு எட்டி உதைத்தனர். இதில் இப்ராஹீம் கீழே விழுந்ததும் அவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால், அவரை குத்திக்கொலை செய்தனர். உடனே ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரையும் விழுப்புரம் மேற்கு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், ராஜசேகர், வல்லரசு ஆகியோரின் இத்தகைய செயல்களை தடுக்கும்பொருட்டும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்