தமிழ்நாட்டில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!

தமிழ்நாட்டில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-03-31 08:31 GMT

தஞ்சாவூர்,

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உள்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி கூறினார்.

இது தொடர்பாக அவர் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே தஞ்சாவூர் வீணை, பொம்மை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்பட 45 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அந்த வகையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு , ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு ஏற்கனவே விண்ணப்பிக்கபட்டது. பல ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்து இந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டோம்.

அனைத்து ஆய்வுகளும் முடிந்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. 4 மாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. மேற்கூறிய 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைப்பதில் எந்தவித எதிர்ப்பும் இல்லாததால் அந்த பொருட்கள் அனைத்தும் சட்டப்படி புவிசார் குறியீடு பெற்றதாக அறிவிக்கப்படும்.

இன்று அரசு அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடும். இதன் மூலம் 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது. அந்த பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும். புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அந்த பொருள் தனி தன்மை பெறுகிறது.

வெளிநாடுகளுக்கும் எளிதாக ஏற்றுமதி செய்யலாம். பொருட்களை தயாரிப்பவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக பார்க்கப்படுவர். அவர்களுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும். இன்று கிடைக்கும் 11 பொருட்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவிலேயே புவிசார் குறியீடு அதிக அளவில் பெற்றுள்ள மாநிலமாக முதல் இடத்தில் தமிழ்நாட்டில் உள்ளது. இரண்டாம் இடத்தில் கர்நாடகம், மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்